ஒரு பி சென்டர் – அதாவது ஒரு நடுவாந்தர ஊரின் (திருச்செங்கோடு) சினிமா தியேட்டர். தியேட்டர் கூட இல்லை, டெண்டு கொட்டாய். அதன் உப தொழில்களாய் ஒரு சோடாக்கடை, ஒரு டீக்கடை. அங்கே வேலை செய்யும் பதினைந்து சொச்சம் வயது இளைஞர்கள். அவர்களின் வாழ்க்கையை மிகுந்த நம்பகத்தன்மையோடு எழுதி இருக்கிறார் பெருமாள் முருகன். சினிமா காட்சிளை எடிட்டர் கத்தரித்து நீக்கும் சேர்க்கும் பாணியை நாவலுக்குரிய பாணியாய் உருமாற்றி, வார்த்தைகளைக் காட்சிகளாக அமைத்துள்ளது இந்நாவலின் சிறப்புகளில் ஒன்றாகும். வாழ்க்கையின் கனத்தயும் கலைஞனின் படைப்பாற்றலையும் இணைக்கும் புள்ளியாக நாவலின் வடிவம் அமைந்துள்ளது. பெருமாள் முருகன் பேணும் எழுத்துக்கட்டுப்பாடும் சொற்களை விரயப்படுத்த விரும்பாத அவரது கலைத்தன்மையும் நிழல் முற்றத்தைக் கச்சிதமான கதை உலகமாக ஆக்குவதில் கைகொடுக்கின்றன.