நான்மணிக்கடிகை என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும். ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் இப் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் விளம்பி நாகனார் என்பவர். விளம்பி என்பது ஊரைக் குறிப்பதாகக் கொள்ளலாம். இந் நூலில் உள்ள கடவுள் வாழ்த்துச் செய்யுட்கள் இரண்டும் மாயவனைப் பற்றியவை. எனவே, நூல் ஆசிரியர் வைணவ சமயத்தினர் என்று கொள்ளலாம். கடவுள் வாழ்த்து நீங்கலாக 101 செய்யுட்கள் உள்ளன. 'மதி என்னும் மாயவன்' என்ற கடவுள் வாழ்த்தும், 'கற்ப, கழிமடம் அஃகும்' (27), 'இனிது உண்பான் என்பான்' (58), என்னும் செய்யுட்களும் பஃறொடை வெண்பாக்கள். ஏனைய அனைத்தும் நேரிசை, இன்னிசை, அளவியல் வெண்பாக்கள்.