ஒரு வீட்டுக்குள் மெதுவாக நுழைய, காரில் இருந்து அந்த முதியவரும், பெண்மணியும் இறங்கினர். அந்த முதியவரை பார்த்ததும் வீட்டில் இருந்து மூன்று வயது ஆண் குழந்தை ஆசையாக அவனை நோக்கி ஓடி வந்தது, அவனை “தா...த்தா...” என்றப்படி கட்டி அணைத்துக் கொண்டார்.
தன் கணவர் தண்ணீர் கேட்டபோது அவருக்கு மருந்து கொடுக்க வேண்டும் என்ற நினைவே அப்போது தான் அவளுக்கு வந்தது. கையில் மருந்து, மாத்திரை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தாள். அப்போது வெளியே அவர்கள் வீட்டு முன்பு ஒரு பைக் வந்து நிற்கும் சத்தம் அவளுக்கு கேட்கிறது. வண்டி நிறுத்தும் சத்தத்தை வைத்தே சிறுவன் ஆகாஷ் "அப்..பா... வந்தாச்சு” என்று சொன்னான்.
தன் மகனிடம் பேசிக் கொண்டு இருந்ததில் தன் கணவனுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பதை அவள் மறந்துவிட்டாள்.
சிவகாமியின் கணவர் தன் கையை நெஞ்சில் வைத்தப்படி சோபாவில் சாய்ந்தார். ரகு, சிவகாமி அழைக்க கூட அவரால் குரல் எழுப்ப முடியவில்லை. அவரின் கண்கள் மெல்ல மெல்ல மூடின. இதய துடிப்பு மெதுவாக குறையத் தொடங்கின.
தன் மாமனார் பேச்சு, மூச்சு இல்லாமல் சோபாவில் மயங்கி கிடப்பதை பார்த்து "ஐயோ மாமா!! என்ன ஆச்சு..?” என்று அலறிய படி சோபாவை நோக்கி ஓடினாள்.
வினிதாவின் குரலை கேட்ட சிவகாமியும், ரகுவும் ஓடினர். தன் தந்தையின் நாடி துடிப்பு மெல்ல மெல்ல குறைந்துக் கொண்டு இருப்பதை ரகு உணர்ந்தான். திடு திடுவென ஓடி செல்போனை எடுத்து தன் மருத்துவ மனையில் இருந்து ஆம்பிலன்ஸை வரவழைக்கிறான்.
தான் ஒரு டாக்டராக இருந்தாலும் தன் உறவுகள் என்று வந்தவுடன் படித்த படிப்பு உதவ முடிந்து முடியாமல் இருந்தது. மனம் பாமரன் போல பயம் சூழ்ந்துக் கொள்கிறது. அப்படி ஒரு நிலையில் தான் ரகு இருந்தான்.
ரகுவின் தந்தை ஐ.சி.யூவில் சேர்க்கப்பட்டு, ட்ரிப்ஸ் ஏத்தினர். ஒவ்வொரு இடத்திலும் ஒரு இயந்திரம் பொருத்தி இருந்தது. மருத்துவரான ரகு இது பழக்கம் என்றாலும் தன் தந்தைக்கு என்று வந்தவுடன் அவனால் தாங்கிக் கொள்ள முடிய வில்லை. அவனால் தன் தந்தையை இப்படி பார்க்க முடியவில்லை. வேறு ஒரு மருத்துவரிடம் தன் தந்தையை கவனிக்க சொல்லி ஐ.சி.யூவில் இருந்து வெளியே வந்தான்.
ரகுவின் தந்தையின் ரிப்போர்ட் ஒவ்வொன்றையும் பெரிய டாக்டர் புரட்டிப் பார்த்தார். இதற்கு முன்பு அவருக்கு மாரடைப்பு வந்ததில்லை. இது தான் முதல் முறை. அவன் தந்தையின் இதய துடிப்பு குறைந்துக் கொண்டு இருந்ததே தவிர, எந்த முன்னேற்றமும் அடையவில்லை. ரகுவின் தந்தை மரணத்தை நோக்கி சென்றுக் கொண்டு இருப்பதை உணர்ந்தார்.
“மிஸ்டர் ரகு..! ஐ யம் வெரி ஸாரி... இன்னும் இரண்டு மணி நேரம் தான் உங்க அப்பா உயிரோட இருப்பாரு” என்று பெரிய டாக்டர் சொல்ல சொல்ல ரகுவின் கண்ணில் கண்ணீர் தாரை தாரையாக கொட்டிக் கொண்டு இருந்தது.
ஒவ்வொரு மனிதன் இறக்கும் முன்பு இரண்டு மணி நேரம் தன் உள்ளுணர்வுடன் பேசிக் கொள்வானாம். தன்னை சுற்றி இருப்பவர்கள் அழுவதை பார்த்து ஏன் அழுகிறார்கள் என்று பேசிக் கொள்வார்களாம். தன்னுடம் பேசிக் கொண்டே மெல்ல மெல்ல உயிர் போகுமாம். இதை உணர்ந்து சொன்னவன் யாருமில்லை. கற்பனை என்று சொன்னாலும் உண்மை என்று நிருபிக்க ஆதாரமில்லை. ஒரு வேளை இது உண்மையாக இருந்தால் தன் தந்தை தன்னை பற்றி என்ன பேசுவார் என்று ரகு தனக்குள் கேட்டுக் கொண்டான்.
“என் மகன் நினைத்தது உண்மை தான். ஒவ்வொரு மனிதன் இறக்கும் முன் தன் உள்ளுணர்வுடன் இரண்டு மணி நேரம் பேசிக் கொள்வான். தன் வாழ்நாளில் கடந்து வந்தவர்களை பற்றி நினைத்துக் கொள்வான். தன் பிரிவால் பாதிக்கப்படுபவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வான். இது வரை வாழ்ந்த நாளை இரண்டு மணி நேரத்திற்குள் நினைவோடையாக ஓட்டிக் கொள்வான். அப்படித் தான் நான் என் நினைவோடையை ஓட்டப்போகிறேன். என் நினைவுகளை நீங்கள் எப்படி புரட்டி பார்த்தாலும் முக்கியமான மூன்று பேர் இருப்பார்கள். அந்த மூன்று பேர்களும் பெண்கள். அந்த மூன்று பெண்கள் தான் என்னை இதுவரை இயக்கியவர்கள். அவர்கள் தான் என்னை வாழ வைத்தவர்கள். நான் வாழ காரணமாக இருந்தவர்கள். இப்போது நான் சாக காரணமாக இருப்பவர்களும் அவர்கள் தான்.”
“அந்த மூன்று பெண்கள் தான் காரணம்.”
இனி கதைக்குள் செல்லுங்கள்