"ஏழு வண்ணங்களைக் காட்டி எல்லோருடைய மனதையும் கொள்ளையடிக்கும் அந்த வானவில்லின் ஆயுள் சில நிமிடங்கள் மட்டுமே. மனித வாழ்க்கையும் ஒரு வானவில்தான். இங்கே ஆயுள் என்பது வருடங்களில் வேறுபடுகிறது. வானவில்லின் எட்டாவது நிறம் என்பது இல்லாத ஒன்று. ஆனால் இந்த நாவலில் எட்டாவது நிறம் இருக்கிறது அந்த நிறத்தின் பெயர் என்ன என்பது நாவலை கேட்கும்போதே தெரியும். விப்ஜியார் (VIBGYOR) எனப்படும் ஒரு கெமிக்கல் கம்பெனியில் எம்.டி. வசுந்தராவுக்கு பர்சனல் செக்ரட்டரியாக பணியாற்றும் சுஜாதாவுக்கு அந்தக் கம்பெனியில் நடக்கும் பல விஷயங்கள் ஆச்சர்யத்தை உண்டாக்குகின்றன. அவற்றை சுஜாதா தன் காதலன் ராகவ்வுடன் பகிர்ந்து கொள்கிறாள். வசுந்தராவின் கெஸ்ட் ஹவுஸ் குளியலறையில் மூன்று பேர் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடக்கிறார்கள். அந்த மூன்று பேரும் வசுந்தராவுக்கு முன்பின் பழக்கமில்லாத மனிதர்கள். அவர்களைக் கொன்றது யார்.....? எந்த காரணத்துக்காக கொலை செய்யப்பட்டார்கள்? வானவில்லின் எட்டாவது நிறத்துக்கும் விப்ஜியார் கம்பெனியில் நடைபெறும் விபரீத சம்பவங்களுக்கும் என்ன சம்பந்தம்? இது போன்ற கேள்விகளுக்கு நாவலின் இறுதி அத்தியாயத்தில் சரியான பதில்கள் கிடைக்கின்றன. இது ஒரு மெடிக்கல் க்ரைம் த்ரில்லர்."