ராய் எஃப். பாமைஸ்டர், உலகிலுள்ள மிகப் பிரபலமான உளவியலாளர்களில் ஒருவர். அவர் 700க்கும் அதிகமான ஆய்வுக் கட்டுரைகளையும் 40க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார். அவற்றில், ஜான் டீர்னியுடன் இணைந்து அவர் எழுதியுள்ள இரண்டு பிரபலமான நூல்களும் அடங்கும். உலகிலுள்ள சிறந்த பல்கலைக்கழகங்கள் பலவற்றில் உளவியல் துறையில் அவர் பணியாற்றியுள்ளார். 2013இல், அவருடைய வாழ்நாள் சாதனைக்காக, வில்லியம் ஜேம்ஸ் ஃபெல்லோ விருது அவருக்கு வழங்கப்பட்டது. சர்வதேச நேர்மறை உளவியல் கழகத்தின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மனிதர்களின் சுயம் அவர்களின் நடத்தையின்மீது ஏற்படுத்துகின்ற தாக்கத்தைப் பற்றி அவர் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகள் பரபரப்பாகப் பேசப்பட்டன. மனிதர்களின் சுய கட்டுப்பாடு, சுய மதிப்பு, சுய தீர்மானம் ஆகியவற்றுக்கும், வெற்றி மற்றும் ஒழுக்கத்திற்கும் இடையே உள்ள தொடர்புகள் குறித்து அவர் பல ஆழமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். அவருடைய படைப்புகளைப் பற்றி உலகிலுள்ள தலைசிறந்த பத்திரிகைகளும் இதழ்களும் எழுதியுள்ளன. உலகின் பிரபலமான தொலைக்காட்சி ஊடகங்கள் அவரைப் பேட்டியெடுத்து வெளியிட்டுள்ளன.
ஜான் டீர்னி ஓர் எழுத்தாளர். அவர் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அதில் தொடர்ந்து பல அறிவியல் கட்டுரைகளை அவர் எழுதி வந்தார். தற்போது, சிட்டி ஜர்னல் என்ற இதழின் எடிட்டராக அவர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவருடைய எழுத்துப் பணிக்காக, ‘அமெரிக்கன் அசோசியேஷன் ஃபார் த அட்வான்ஸ்மென்ட் ஆஃப் சயன்ஸ்’ அமைப்பும், ‘அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிசிக்ஸ்’ அமைப்பும் அவருக்கு விருதுகள் வழங்கி அவரைக் கௌரவித்துள்ளன. அவர் ஒரு சில நூல்களை எழுதியுள்ளார். அவற்றில், ராய் எஃப். பாமைஸ்டருடன் அவர் இணைந்து எழுதியுள்ள இரண்டு மிகப் பிரபலமான நூல்களும் அடங்கும்.