மகான்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்கு அசாதாரணத் துணிவு வேண்டும். அதுவும் அண்மையில் வாழ்ந்திருந்தவரைப் பற்றி எழுதுவதென்றால் அதிக விழிப்புடன் இருக்கவேண்டும். எங்கேனும் ஓரிடத்தில் இடறிவிட்டால் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் அம்மகானின் சீடர்களிடமும் அன்பர்களிடமும் அகப்பட்டுக் கொள்ளும்படியாகி விடும். அதுவும் இது மனித நிலை கடந்த அதிமனிதரைப் பற்றிய வரலாறு. அவரது கொள்கையும் கருத்துகளும் புத்தம் புதியன. 'எனது வரலாற்றை உள்ளபடியே எழுத முடியாது' என்று சொன்ன ஸ்ரீ அரவிந்தரின் வரலாறு. இந்தச் சரிதத்தை எழுதுவதற்கு இதன் ஆசிரியருக்கு வெறும் துணிச்சல் மட்டுமா இருந்தது? 'ஸ்ரீ அரவிந்தர் என்ற தெய்வத்தை மன ஊஞ்சலில் வைத்து அசைத்து அசைத்து அழகு பார்க்கும்' ஆசையல்லவா வந்திருக்கிறது? அன்புள்ளத்திலிருந்து எழுந்த ஆசை அது. அந்த அன்பின் வலிமை தான் இந்த அரவிந்த அமுதத்திற்கு சுவை மட்டுமல்ல, கம்பீரமும் சேர்த்திருக்கிறது. நல்ல தூரிகை போன்ற பேனாவை வைத்திருக்கிறார் இந்த திருப்பூர் கிருஷ்ணன். நாளைக்குப் படிக்கலாம் என்று இலேசாகப் பக்கங்களைத் திருப்பினால் இவர் சமைத்துள்ள தோரண வாயிலின் நடையிலேயே நம்மை நிற்க வைத்து விடுகிறது. எந்த முக்கிய நிகழ்ச்சியையும் விட்டுவிடாமல் கவனமாக, விழிப்புடன், பொறுப்புணர்ச்சியுடன், தக்க ஆதாரங்களுடன் ஒரு நல்ல நூலைப் படைத்துவிட்டார் இவர். படித்துக்கொண்டே போகும்போது நம்மை நிற்க வைக்கும் சில நறுக்குகள்: எல்லோரும் இதைப் படிக்கவேண்டும். முக்கியமாக இளைஞர்கள் படிக்க வேண்டும். அவர்கள்தான் வருங்காலத்தின் பொறுப்பாளிகள்.
Grož. ir negrož. literatūra