"அட்டிலா உண்மையாக வாழ்ந்தவன். உலகத்தையே வென்றவன். அசைத்துக் கொள்ள முடியாதது என்று இறுமாந்திருந்த உரோமானியப் பேரரசை வீழ்த்தியவன். பரம்பரை, பாரம்பரியம், செல்வாக்கு, வசதி, வாய்ப்புகள் என்று உறுதிமிக்க அடித்தளம் கொண்ட ஆட்சியாளர்களை இந்த நாடோடி வென்று காட்டினான். இவனது இனம் ஓரிடத்தில் நில்லாமல் ஊர் ஊராய்ப் போய்க் கொண்டிருந்தது ஒரு காலத்தில். அப்படிப்பட்ட இவர்கள் எப்படி உரோமப் பேரரசை வீழ்த்த முடியும் என்கிற சந்தேகம் உங்களுக்கு மட்டுமல்ல அட்டிலாவின் இனத்தவர்களுக்கே ஏற்பட்டது. எல்லாம் உன்னால் முடியும் தம்பி என்று ஊக்கம் கொடுத்துத் தன் எண்ணத்தை ஈடேற்றியவன் அட்டிலா.ஆறாவது வட்டத்திற்குத் துணைத் தலைவர் என்றாலே ஆளுயர மாலை கேட்கும் நம் ஆட்கள் மத்தியில் அகண்ட தேசத்தை ஆண்டவனாக இருந்தபோதிலும் மர வட்டிலிலேயே உணவருந்திய எளிமைக்குச் சொந்தக்காரன். தலைமுறை தலைமுறைக்கும் சொத்துச் சேர்க்க நினைப்பவர்கள் மத்தியில் தனது தலைக்கே விலையாகப் பேசப்பட்ட பொன்னைக்கூடத் தானே கைப்பற்றி அதை முற்றிலுமாகத் தன் இன நலனுக்கே செலவிட்டான் இவன். வரலாற்றுக்கும் தெரிந்தவரையில் வரலாற்றுக் கால ஆய்வின்படி உலகின் மிகப் பெரிய படை வரிசைகளில் இரண்டாவதுதான் பெரிய படைக்குத் தலைமை தாங்கியவன் அட்டிலா. அவன் இப்போது உயிரோடு இருந்திருந்தால் உங்களை எப்படி ஊக்கப்படுத்தி இருப்பான் என்று யோசித்தோம். விளைவு? இப்போது இந்தப் புத்தகம் உங்கள் கைகளில்..."
Beletrystyka i literatura